நாகை அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி
நாகை அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி : திருடனை துரத்தி கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பகீர் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 73 வயதான கஸ்தூரி என்பவர், தனது வீட்டில் மருமகள் மற்றும் இரண்டு பேரன்களுடன் இருந்தபோது, முகத்தில் வெள்ளை துணி கட்டிய மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அந்த நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். திடீரென சுதாரித்துக் கொண்ட மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அறையில் இருந்த மருமகள் சரண்யா வெளியே வந்ததும், குற்றவாளி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு வந்து, அவரை துரத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த பகுதிக்குள் ஓடிய அந்த நபரை பொதுமக்கள் பிடித்து, கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார், அந்த நபரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்பதும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட குற்றவாளியான பாரதி முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும், இவருடன் தொடர்புடைய இன்னும் சிலர் இருப்பதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு வீடுகளில் மோட்டார் மற்றும் ஆடுகள் திருடப்பட்டதாகவும், மற்றொரு வீட்டில் சுமார் நான்கு பவுன் செயின் திருடப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றும் இதுவரை எந்தத் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே, தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

