சிதம்பரம் அருகே பெண்கள் சாலை மறியல் போராட்டம்
சிதம்பரம் அருகே 100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்.
போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை.100 நூறு நாட்களுக்கு வேலையும் வழங்கப்படுவதில்லை, ஊதியமும் சரிவர வழங்கப்படவில்லை எனவும், ரூ. 200 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு.
சிதம்பரம் அருகே உள்ளது சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி. குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டம் சரிவர நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை செய்த பயனாளிகளுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து சி. தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 100 பேர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகரில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் இணைப்புச் சாலையில் பெண்கள் நடுரோட்டில் அமைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

போராட்டம் குறித்து கூறிய பொதுமக்கள், 100 நாள் வேலை சரியான முறையில் 100 நாட்களுக்கு வழங்குவதில்லை. சில நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறார்கள்.
அதற்கான ஊதியத்தையும் குறைத்து வழங்குகிறார்கள். ஒரு நாள் வேலைக்கு ரூ. 345 சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் ரூ. 200 மட்டுமே சம்பளமாக வழங்குகிறார்கள். அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள். பெரும்பாலானோருக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படாத நிலையில், வேலை நேரத்திலும் பல்வேறு கெடுபிடிகளை ஏற்படுத்துகிறார்கள். அலுவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். அதோடு வேலைக்கான முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என கூறினர்.