மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை! 🪔
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார். மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்காளம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


