அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்தவும். மூடிக்கிடக்கும் மருத்துவ நிலையங்களை திறக்கவும் அரசு தீவிர நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜு இன்று திறந்து வைத்தார்.
பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டினம், பாண்டுகுடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், மருத்துவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜுவிடம், திருவாடானை தொகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறையுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த அரசு கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கீழக்கரையில் முந்தைய ஆட்சியில் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த மருத்துவமனை குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சுகாதார கட்டிடங்களையும் விரைவில் திறந்து, போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நியமித்து முழுமையான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துதல், பயன்பாட்டிற்கு வராத மருத்துவ நிலையங்களை விரைந்து திறத்தல், புதிய சுகாதார கட்டிடங்களை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் ஆகியவற்றில் அரசு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

