தீபாவளி சிறப்புச் சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
செஞ்சி தீபாவளி சிறப்புச் சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை– அதிகாலை 3 – முதல் 8 மணி வரை 5,000 ஆடுகள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற தீபாவளி சிறப்புச் சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் ஆடு, மாடு சந்தை தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.. செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காடுகள், மலைகளில் மேய்க்கப்படும் வெள்ளாடுகளின் இறைச்சி சுவை அதிகம் என்பதால், செஞ்சி ஆடுகளுக்கு வெளியூர்களில் தனி வரவேற்பு உண்டு.
இதனால் செஞ்சியில் ஆடுகள் வாங்குவதற்காக பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, மதுரை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்காக உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருகை தந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு துவங்கி 8 மணி வரை சந்தை நடந்தது.
இதில் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனைக்கு வரவில்லை.
ஏற்கனவே செஞ்சியை சுற்றி உள்ள அவலூர்பேட்டை, தீவனூர், தல்லாகுளம், வளத்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வார சந்தையில் உள்ளூர் ஆடு வளர்ப்பவர்கள் தங்களது ஆடுகளை பெருமளவு விற்பனை செய்துவிட்டனர்.

இது மட்டுமின்றி வழக்கமாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து வரும் ஆடுகள் எண்ணிக்கையும் மிக குறைவாக இருந்தது.
ஆடுகள் குறைவாக வந்ததால் கூடுதல் விலை கிடைக்கும் என ஆடு விற்க வந்தவர்கள் பிடி கொடுக்காமல் விலையை உயர்த்தி கூறினர்.
ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ஒரு ஆட்டின் விலை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. சராசரியாக ஒரு ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆடுகளின் வரத்து குறைவாக இருந்தபோதிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ரூ.5 கோடியை கடந்து ஆடு விற்பனை நடந்தது.
இந்த சந்தையில் ஆடு விற்பனை மட்டுமின்றி மாடு, கோழி விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த சந்தையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் செஞ்சி சந்தை அதிகாலை முதலே களைகட்டியது.

