திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் மோகினி அலங்காரம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம். ஐந்தாம் நாள் காலை மோகினி அலங்கார புறப்பாடு..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார புறப்பாடு நடைபெற்றது.

மோகினி அலங்கார புறப்பாட்டை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட பின் கலைந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை மற்றும் பல்வேறு வகையான திருவாபரணங்கள் ஆகியவற்றை தரித்த உற்சவர் மலையப்ப சுவாமி மோகினி அலங்கார திருக்கோலம் பூண்டு ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
மோகினி அலங்கார திருக்கோலத்தில் தந்த பல்லக்கில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியின் அழகில் மயங்கியவராக கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் உடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பாடு கோவில் மாலை வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு புராணகாலத்தில் திருப்பாற்கடல் கடையபட்டபோது அதில் இருந்து வெளிப்பட்ட பொருட்களில் ஒன்று அமிர்தம்.
சாகாவரம் அளிக்கும் அமிர்தத்தை யார் பருகுவது என்பது தொடர்பாக அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில் அசுரர்கள் அமிர்தத்தை பருகாமல் தடுக்க மகாவிஷ்ணு மோகினி அலங்காரம் எடுத்து தன்னுடைய அழகால் அவர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க செய்தார்.
புராண காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளன்று காலை மோகினி அலங்கார புறப்பாடு நடத்தப்படுகிறது.
இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன புறப்பாடான கருட வாகன புறப்பாடு நடைபெற உள்ளது.


