in

திருமலை திருப்பதி கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கற்பக விருட்ச வாகனம்

திருமலை திருப்பதி கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கற்பக விருட்ச வாகனம்

 

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நான்காவது நாள் காலை கற்பக விருட்ச வாகன சேவை.

திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கற்பக விருட்சம்

சாகாத தன்மையை அளிக்கும் அமிர்தத்தை பெறுவதற்காக புராண காலத்தில் பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள்.

அதற்காக மந்தார மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய முடிவெடுத்தார்கள்.

பாற்கடலை கடைய தேவர்கள் மட்டும் இயலாது என்பதால் கிடைக்கும் அமிர்தத்தில் சமபங்கு தருவதாக கூறி அரக்கர்களையும் அவர்கள் அழைத்தார்கள்.

வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் பிடித்து இழுத்து பாற்கடலை கடைய தொடங்கினார்கள்.

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார்.

தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை பாற்கடலில் கக்கியது.

அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள், தேவர்கள், அரக்கர்கள், தேவகனங்கள் ஆகியோர் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அப்போது பார்வதி தேவி விஷம் உள்ளே இறங்காமல் தடுக்க சிவபெருமானது கண்டத்தை (தொண்டையை) பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது.

அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

அப்போது பாற்கடலில் இருந்து அமிர்தம், அட்சய பாத்திரம், இந்திரனிடம் இருக்கும் வெள்ளை யானையான ஐராவதம், கற்பக விருட்சம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அபூர்வ திரவியங்கள் தோன்றின.

அவற்றில் கற்பக விருட்சம் யார் எதை வேண்டினாலும் அவர்களுக்கு அதை கொடுக்கும் தன்மை உடையது ஆகும். அத்தகைய தன்மை உள்ள கற்பக விருட்சத்தை வாகனமாக கொண்டு வேண்டியோருக்கு வேண்டியதை வழங்கும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவில் மாட வீதியில் எழுந்தருளி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்களின் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள்,திவ்ய பிரபந்த கானம், நான்மறை வேத கோஷம் ஆகியவற்றிற்கு இடையே நடைபெற்ற ஏழுமலையானின் கற்பகவிருஷ வாகன சேவையை மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து தரிசித்தனர்.

இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. நாளை காலை மோகினி அலங்கார சேவையும், இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவையும் நடைபெற உள்ளது.

What do you think?

ஆசிரியர் தின விழா நல்லாசிரியர்களுக்கு பாராட்டு

 மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் கோ பூஜை