புதுச்சேரி கம்யூ தலைவர் நல்லக்கண்ணு மற்றும்
முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு புதுச்சேரி சட்டமன்றத்தில் இரங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் அன்பழகன் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். உப்பளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் U.C. ஆறுமுகம், J. நாராயணசாமி, பாலசுப்ரமணியம், முன்னாள் துணைநிலை ஆளுநர் லகேரா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரின் மறைவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பேசினார்.
அவர் பேசி முடித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவைக்குள் இருந்து கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், உறுப்பினர்கள் அவையில் பேசிக் கொண்டிருக்கும்போது அதிகாரிகளை வைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
அப்போது முதலமைச்சரின் அருகில் அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முதலமைச்சரின் காதோடு காதாக பேசியதை சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து சபாநாயகர் அன்பழகன், “உறுப்பினர் பேசும்போது முதலமைச்சரின் காதோடு காதாக உள்துறை அமைச்சர் பேசினார். இந்த நெருக்கத்தை தேர்தலின்போது காட்டியிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து பேசினார். அப்போது, “எங்களைப் பிரிக்க பெரிய கூட்டமே சதி செய்கிறது. சபாநாயகர் உட்பட ஒரு குழுவே இதன் பின்னால் இருக்கிறது” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.
இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


