திருவாடானை அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பாண்டுகுடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட துணை சுகாதார நிலையம் திருவடிமிதியூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தத் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் யாரும் இல்லாமல் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவடிமிதியூர், தொத்தார்கோட்டை, கீழவண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, செவிலியர்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்து செல்வதாகத் தெரிவிக்கின்றனர். சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டால் கூட பல கிலோமீட்டர் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே, கிராம மக்களின் நலன் கருதி, இந்தத் துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாகச் செவிலியரை நியமிக்க மாவட்ட மருத்துவத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


