தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அறக்கட்டளைகளுக்கு ரூ.6,000 கோடி வரை வருமான வரி தள்ளுபடி – வருமான வரி ஆணையர் தகவல்
புதுச்சேரி: இந்திய கணக்காளர்கள் சங்கம் சார்பில் வரி செலுத்துவோருக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் சென்னை வருமான வரி (விலக்கு) ஆணையர் பிரேமானந்த் மற்றும் கூடுதல் ஆணையர் சுப்ரஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை வருமான வரி (விலக்கு) ஆணையர் பிரேமானந்த், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 45 ஆயிரம் அறக்கட்டளைகள் வருமான வரித்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
மேலும், இவ்வாண்டு அறக்கட்டளைகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை வருமான வரி தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதன்பின்னர் 2025-ம் ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் வருமான வரி விலக்கு பிரிவுக்கென தனி ஆணையரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரித்துறையில் பதிவு செய்துள்ள அறக்கட்டளைகள் தங்களது தேவைகளுக்காக நேரடியாக ஆணையர் அலுவலகத்தை அணுக முடியும் என்றும் பிரேமானந்த் தெரிவித்தார்.
கருத்தரங்கில் வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


