80-வது பிறந்தநாளில் தாயை நெகிழ வைத்த மகள்!
“என் அம்மாவுக்கு இது மறக்க முடியாத நாள்!” – 80-வது பிறந்தநாளில் 80 வகை சீர்வரிசை; ரூ.2 லட்சம் பண மாலை – தாயை நெகிழ வைத்த வெளிநாட்டில் வாழும் மகள்!
80 தட்டு சீர்வரிசை ரூ.2 லட்சம் பண மாலை… 28 வகையான அறுசுவை விருந்து! – மதுரையில் பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம்!
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி – முத்துச்செல்வி (80) தம்பதியருக்கு நான்கு பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள் என மொத்தம் 8 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், 80 வயதை எட்டிய தனது தாயின் பிறந்தநாளை வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாட வேண்டும் என வெளிநாட்டில் வசித்து வரும் அவரது ஐந்தாவது மகள் தனலட்சுமி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தாய்வழி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து, சத்திரப்பட்டி கிராமத்தில் தாயின் 80-வது பிறந்தநாள் விழாவை விமரிசையாக நடத்தினார்.
பிறந்தநாள் விழாவின் முக்கிய நிகழ்வாக, தாயின் 80 வயதை குறிக்கும் வகையில் 80 வகையான சீர்வரிசைத் தட்டுகள் பிரம்மாண்டமாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.
அதில், தாய்க்கு பிடித்த 8 பவுன் தங்க நகைகள், 8 வகையான வெள்ளிப் பொருட்கள், 8 வகையான இனிப்புகள், 8 வகையான கேக்குகள், 8 வகையான கார வகைகள், 8 வகையான பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
80 தட்டுகளாக அலங்கரித்து கொண்டுவரப்பட்ட இந்த சீர்வரிசையை பார்த்த உறவினர்களும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
இதோடு நிற்காமல், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூ.500 நோட்டுகளை கொண்டு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பண மாலை தாய்க்கு அணிவிக்கப்பட்டது.
மேலும், சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நாணயங்களால் செய்யப்பட்ட மாலை, ஏலக்காய் மாலை உள்ளிட்ட 8 வகையான மாலைகளும் மூதாட்டிக்கு அணிவிக்கப்பட்டன.
பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட உறவினர்களுக்காக 28 வகையான அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.
மேலும், விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பிரம்மாண்ட அலங்காரப் பொம்மைகள் உள்ளிட்டவை இடம்பெற்ற ஊர்வலமும் நடைபெற்றது.
தனது 80-வது பிறந்தநாளை இவ்வளவு பிரம்மாண்டமாகவும், உறவினர்களை ஒரே நாளில் இந்த நிகழ்வின் மூலம் ஒருங்கிணைத்தும் மகள் கொண்டாடியதை பார்த்து மூதாட்டி முத்துச்செல்வி உணர்ச்சிவசப்பட்டார்.
மகளின் அன்பையும், பாசத்தையும் கண்டு அவர் கண்கலங்கிய காட்சி அங்கு கூடியிருந்த உறவினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பல லட்ச ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த பிரம்மாண்ட பிறந்தநாள் விழா, சத்திரப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
80 வயது தாய்க்கு 80 வகை சீர்வரிசை, ரூ.2 லட்சம் பண மாலை, 8 வகை மாலைகள், 28 வகை அறுசுவை உணவு என மகள் ஏற்பாடு செய்த இந்த வித்தியாசமான பிறந்தநாள் விழா, “தாயின் அன்புக்கு நிகராக மகளின் பாசமும் பிரம்மாண்டமாக இருக்கலாம்” என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

