ஒன்பது கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம்
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம்…..
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
திருக்கார்த்திகை தீப திருவிழாவை காண உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து மகா தீப தரிசனத்தை பார்த்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரம் ஆகிய நான்கு பிரதான கோபுரங்கள் மற்றும் கோவிலின் உள்ளே உள்ள கிளி கோபுரம் உள்ளிட்ட ஐந்து சிறிய கோபுரங்கள் என ஒன்பது கோபுரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அமாவாசை தினமான இன்று முதல் ஒன்பது கோபுரங்களில் பொறுத்தப்பட்டுள்ள விளக்குகள் தீப திருவிழா முடியும் வரையில் தொடர்ந்தது எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


