30 ஆண்டுகளுக்கு பிறகு மகா சம்ப்ரோக்ஷணம்
30 ஆண்டுகளுக்கு பிறகு மகா சம்ப்ரோக்ஷணம்: உக்கரை லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் கோலாகலம்!
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம் உக்கரை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லெட்சுமிநாராயண சுவாமி ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மகா சம்ப்ரோக்ஷணம் என்னும் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல மாதங்களாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. கடந்த 29-ஆம் தேதி ஸ்ரீ சுதர்சன ஹோமம், புண்யாஹவாசனம், ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ ஆஞ்சநேய ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று 2-ஆம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

