கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாட்டம்
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று விஜயதசமி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கடவுளாக எண்ணி பூஜை செய்து வழிபடுவது ஆயுத பூஜையாகும். அதன் மறுநாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், முதல் நாள் பூஜை செய்த புத்தகங்கள் மற்றும் பொருட்களுக்கு பக்தியோடு நெய்வேத்தியம், தீபாராதனை செய்து, புத்தகங்களில் சில வரிகளாவது படித்தால் கல்வி அபிவிருத்தி ஆகும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிக்க தினத்தில் குழந்தைகளின் கல்வியை தொடங்குவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் குழந்தைகள் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதியும், கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற நவதானியங்களின் மீதும் தங்களது கல்வியை தொடங்கினர். ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் உயிர் எழுத்துக்களையும், மெய் எழுத்துக்களையும் எழுத வைத்தனர்.
கல்விக்குரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்குரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்குரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக இவ்விழா எம் பள்ளியில் உற்சாகமாகவும், பக்தி பெருக்குடனும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி. பூர்ணிமா கார்த்திகேயன் அவர்கள் குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.
இன்று குழந்தைகளின் கல்வியை தொடங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

