ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
நாகை அருகே கோவில்கடம்பனூர் ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே கோவில்கடம்பனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்கடம்பனூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி அம்பிகா உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சட்டநாத ஐயனார், ஸ்ரீ பணிக்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வீரன் ஆலயங்கள் அமைந்துள்ளன.
இக்கோயிலில் விமானங்களுக்கு வர்ண கலாபங்கள் தீட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மகா கும்பாபிஷேக விழா கடந்த 28-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நாளான இன்று காலை கோபூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ணாஹுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சட்டநாத ஐயனார், ஸ்ரீ பணிக்கேஸ்வரர், ஸ்ரீ வீரன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் கோவில்கடம்பனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில்கடம்பனூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்


