1000 கலைஞர்கள் பங்கேற்கும் புதுச்சேரி கலைவிழா
புதுச்சேரி..1000 கலைஞர்கள் பங்கேற்கும் புதுச்சேரி கலைவிழா..முதல் அமைச்சர் ரங்கசாமி முரசு கொட்டி துவக்கி வைத்தார்…

புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து 3 நாள் புதுச்சேரி கலைவிழாவை நடத்துகின்றன.
5 இடங்களில் நடைபெறும் இந்த விழாவை கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை இரவு முரசு கொட்டி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 38 ஆண்டுகளாக இந்த கலைவிழா நடத்தப்படுகிறது..
இந்த கலைவிழாவில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் 1000 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், விக்னேஷ் கண்ணன், கலை, பண்பாட்டுத்துறை செயலர் முகமது அசன் அபித், இத்துறையின் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி கடற்கரை காந்தி திடல், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம், மடுகரை மந்தவெளி திடல், உருவையாறு அரசு கலையரங்கம், திருக்கனூர் மாரியம்மன் கோயில் திடல் ஆகிய 5 இடங்களில் 3 நாள்களுக்குத் தினமும் மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை நடக்கிறது.

இதில் அசாம், உத்தரகாண்ட், ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜம்மூ}காஷ்மீர், குஜராத், தெலுங்கானா, கேரளம் , கர்நாடகம், பிரெஞ்சு நாடு அருகேயுள்ள ரீ யூனியன் தீவு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள கலைக் குழுக்கள் மாறி மாறி கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
44 கலைக் குழுக்களைச் சேர்ந்த 1000 பேர் இந்த விழாவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை 3 நாட்களுக்கு வழங்குகின்றனர்.

