மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு
தேனி மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு – உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு
தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மின் மோட்டார்கள் மற்றும் மின் வயர்கள் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், குறிப்பாக கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம் மற்றும் தாடிச்சேரி வருவாய் கிராமப் பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் வயர்கள் தொடர்ச்சியாகத் திருடு போய் வருகின்றன. இரவு நேரங்களில் தோட்டங்களுக்குச் சென்று மோட்டார் இயக்கக் கூட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
திருடர்கள் யார் என்பது காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட காவல் துறை உடனடியாக தலையிட்டு இந்தத் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தொடரும் மின் மோட்டார் மற்றும் காப்பர் வயர் திருட்டுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரங்களில் விவசாயிகள் பயமின்றி தோட்டங்களுக்குச் செல்லவும், விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கவும் காவல் துறையின் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்.
அண்டை மாநிலங்களைப் போன்று (கேரளா, கர்நாடகா, ஆந்திரா) தமிழ்நாட்டிலும் தென்னை விவசாயிகளின் நலன்கருதி, உரிய அரசு அனுமதியுடன் கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் இந்தப் பாதுகாப்புப் பிரச்சினை மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

