in

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பஞ்சநதி கோட்டை கிராம மக்கள்

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பஞ்சநதி கோட்டை கிராம மக்கள்

 

பள்ளிக்குச் செல்ல வயல் வரப்புகளில் நடக்கும் மாணவர்கள்… அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பஞ்சநதி கோட்டை கிராம மக்கள் அரசுக்கு எத்தனையோ கோரிக்கைகள் விடுத்தும், தனித்து விடப்பட்ட இந்த கிராம மக்களின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அமைந்துள்ள பஞ்சநதி கோட்டை கிராமத்தில், பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் வயல் வரப்புகளில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், இந்த கிராமம் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்திப்பட்டி கிராமத்தைப் போல, பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் அரசின் கவனத்திற்கு எட்டாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பஞ்சநதி கோட்டை கிராமத்தின் ஆதிதிராவிடர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தைச் சுற்றி பசுமை நிறைந்த வயல்வெளிகள் இருந்தாலும், அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விவசாயக் கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை வருமானத்தை மட்டுமே நம்பி இங்குள்ள குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும், ஒரு நாளுக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கிராமத்திற்குள் சாலை வசதி இல்லாததால், அருகிலுள்ள கிராமத்திற்கு வரும் பேருந்தைப் பிடிக்க சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குடிநீர் வசதியும் மிக மோசமான நிலையில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்து சேதமடைந்துள்ளதால், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் ‘வீட்டுக்கு வீடு கழிவறை’ திட்டம் இந்த கிராம மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தாலும், சுமார் 50 வீடுகள் மட்டுமே இருப்பதால் இரண்டு குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. புதிய தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்படாததால் வீட்டு வசதி பிரச்சினையும் நீடித்து வருகிறது.

மேலும், சுடுகாட்டிற்குச் செல்லக்கூட சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் வயல் வரப்புகள் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்தும், தமிழ்நாட்டில் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கும் கிராமங்கள் இருப்பதற்கு பஞ்சநதி கோட்டை ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பல ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு வராமல் புறக்கணிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு, அடிப்படை வசதிகள் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

What do you think?

காமராஜர் அவதூறு விவகாரம்: முத்தர அகமது மீது நடவடிக்கை கோரி மேஜிஸ்டிரேட் உத்தரவு

திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுன மகாராஜா திருக்கல்யாணம்