தரங்கம்பாடி தாலுகாவில் ஆட்டோ ஸ்டாண்டுகள், மெக்கானிக் கடைகள் முதல் மீன்பிடித் துறைமுகம் வரை களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, ஆட்டோ ஸ்டாண்டுகள், மெக்கானிக் கடைகள், பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து தொழில் சிறக்க வேண்டி வழிபாடு செய்தனர். இதேபோல் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடிப் படகுகளுக்குத் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி, வண்ணமயமாக அலங்கரித்த பல்வேறு பழ வகைகள், அவல், பொரி, சுண்டல் உள்ளிட்டவற்றைப் படையலிட்டு தங்களது குடும்பத்தினருடன் இணைந்து மீனவர்கள் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினர்.


