நாகை அருகே சோகம்! வீடு இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
நாகை அருகே வீட்டின் சீலிங் இடிந்து விழுந்ததில் இடுப்பாடுகளில் சிக்கி தொழிலாளி பலி: ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் ஆம்புலன்ஸ் வராததால் ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அவலம்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பீரங்கி தெருவைச் சேர்ந்த முகமது அனிபா என்பவரது வீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில், பனங்குடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கர் மற்றும் அவருடன் இருவர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் வீட்டின் பழைய கான்கிரீட் மேற்கூரையை இடிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக மேற்கூரை முழுவதுமாக திடீரென சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சங்கர், வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடினார்.
விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும்108 ஆம்புலன்ஸ் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு திரண்ட நாகூர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் இறங்கினர். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளை அகற்றி, சங்கரை மீட்டனர்.

அப்போதும் ஆம்புலன்ஸ் வராததால், ஆபத்தான நிலையில் இருந்த அவரை பொதுமக்கள் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த உடனே தகவலளித்தும், மீட்புப் பணிகளுக்கு தீயணைப்புத் துறையினரும் ஆம்புலன்ஸும் குறித்த நேரத்தில் வராததே தொழிலாளியின் உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறி, அங்கு தாமதமாக வந்த தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

