சக்திவாய்ந்த நிலநடுக்கம் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்பதால் சம்பந்தப்பட்ட நாடுகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ளது மின்டானோ தீவு. இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.2-ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்டானோ தீவில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகருக்கு தென் மேற்கே 13 கி.மீ. தொலைவிலும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மின்டானோ தீவில் உள்ள பல வீடுகள், அலுவலங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க, இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலை எழக்கூடும் என்றும், அண்டை நாடுகளில் 1 மீட்டர் (3 அடி) உயரம் வரை சுனாமி அலை எழக்கூடும் எனவும் பிசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நாடுகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த நாட்டில் மட்டுமின்றி தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிகப்பெரிய சுனாமி தாக்கி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

