in

மத்திய அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகிறார் ஞானேஷ் குமார்: திண்டுக்கல்லில் வைகோ குற்றச்சாட்டு

மத்திய அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகிறார் ஞானேஷ் குமார்: திண்டுக்கல்லில் வைகோ குற்றச்சாட்டு

திண்டுக்கல், 2026: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மத்திய அரசின் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், தமிழக அரசின் நடவடிக்கைகள், நடிகர்களின் அரசியல் வருகை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், நாடு முழுவதும் 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்தார். ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித் துறையில் பணியாற்றிய காலம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எஸ்ஐஆர் தொடர்பான பணிகளில் திமுகவினரே ஈடுபட்டதாகக் கூறிய வைகோ, தேர்தல் தோல்விக்கு வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் காரணமாகக் கூறும் திமுகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்தார். இந்தப் பணிகள் முறையாக நடைபெற்றிருந்தால், விஜய் மேலும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பார் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் சேகர்பாபுவே எஸ்ஐஆர் தொடர்பான பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவினர் இப்பணிகளில் ஈடுபட்ட நிலையில், குளறுபடி ஏற்பட்டதாக அக்கட்சி கூறுவது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்துப் பேசிய வைகோ, அதிமுக ஆட்சியில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கொண்டுவரப்பட்டதாகவும், அதன் நிர்வாகத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதரவளித்ததாகவும் குற்றம்சாட்டினார். முந்தைய அரசுகள் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அனைத்து ஆட்சிக் காலங்களிலும் கொலை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார். தற்போது காவல்துறை திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார். முந்தைய திமுக ஆட்சியில் ஆணவக் கொலைகளும் பாலியல் குற்றங்களும் அதிகமாக நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த வைகோ, செல்வாக்கு மிக்க நடிகர்கள் பலர் அரசியலுக்கு வந்தபோதும், இரண்டு ஆண்டுகளுக்குள் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் விலகிச் சென்றுள்ளதாகக் கூறினார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த கட்சிகள்கூட தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு இன்னல்களுக்கு இடையே 32 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தி வருவதாகக் கூறிய அவர், மதிமுக ஒருபோதும் தனது கொள்கைகளிலிருந்து விலகாது எனத் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி என்ற பெயரில் பெரிய ரக அரிசி வழங்கப்படுவதாக எழுப்பப்பட்ட புகார் குறித்துக் கேட்டபோது, இதுபற்றி இப்போதுதான் தகவல் கிடைத்துள்ளதாகவும், முதல்வரிடம் பேசுவதாகவும் வைகோ தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்ந்து வருவதாகக் கூறினார். முந்தைய முதல்வர்கள் விலைவாசி உயர்வை முழுமையாகக் கட்டுப்படுத்தினார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், முதல்வர் விஜய்யை மட்டும் குறைகூறுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

What do you think?

சங்கரன்பந்தல் அருகே தாமதமாகும் பணி நெடுஞ்சாலைதுறை துரிதப்படுத்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை:-

Casino Bewertung mit Live Chat: Ein Experte Leitfaden für Spieler