விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மகப் பெருவிழா
அருள்மிகு விபசித்து முனிவருக்கு அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா கோலாகலம்.

காசியை விட வீசம் அதிகம் என்று பழங்காலம் தொட்டுப் போற்றப்பட்டு வரும், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தாம்பிகை -பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் ,மாசி மகப் பெருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், இவ்வருட மாசி மகப் பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் விழா நடைபெற்று வந்த நிலையில்,
இன்று ஆறாம் நாள் திருவிழாவான, அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று,கோயில் உட்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில், அருள்மிகு விநாயகர், அருள்மிகு வள்ளி -தெய்வானை முருகர், அருள்மிகு விருதாம்பிகை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர், அருள்மிகு பாலாம்பிகை, அருள்மிகு சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காட்சி அருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அன்னப்படையிலிட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு, நூற்றுக்கால் மண்டபத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி, கோவிலை சுற்றி வலம் வந்து, கிழக்கு கோபுர வெளிப்புற வாசல் மண்டபத்தின் மேலுள்ள அருள்மிகு விபசித்து முனிவருக்கு, அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் மலர்களை தூவியபடி முத்தாரா முதுகுன்றா என முழக்கமிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று, எட்டு ரத வீதிகளை சுற்றி வந்து, நாளை சுவாமிகள் கோவிலை வந்தடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, 9 ஆம் நாள் திருத்தேர் திருவிழாவும்,பத்தாம் நாள் மாசி மகப் திருவிழாவும்,பதினோராம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
பக்தர்களின் நல்லணை கருத்தில் கொண்டு விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரபாசந்திரன் மேற்பார்வையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


