இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நெல்லை சு.முத்துவின் உடல் மதுரையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தாத்தா முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத பேரன். ஆறுதல் படுத்திய குடும்பத்தினர்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுண் மேலரத வீதி பகுதியை சேர்ந்த நெல்லை சு.முத்து(74). ஸ்ரீஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக செயல்பட்டுவந்தார். இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் உடன் பணியாற்றியவர்.
அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய நான்கு புத்தகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு மற்றும் சிறந்த நூலாசிரியர் என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இவரது. விண்வெளி 2057 எனும் நூல், 2000ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் பரிசை பெற்றுள்ளது.
அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு எனும் நூல் 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் ‘சிறுவர் இலக்கியம்’ எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
மேலும், ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் என்ற நூல் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசை பெற்றுள்ளது. முக்கியமாக, இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் உடன் பணியாற்றியவர். மலேசியாவின் உலகத்தமிழ் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதும் வழங்கப்பட்டது.
விஞ்ஞானி நெல்லை சு.முத்துவிற்கு மரகதம் என்ற மனைவியும் , பாலசுப்ரமணியன் என்ற மகனும், வாணி என்ற மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நெல்லை சு.முத்து திருநெல்வேலியை பூர்வமாகக் கொண்டிருந்தாலும் கூட, திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததால் அங்கு குடியேறினார்.
பின்னர் சில ஆண்டுகளாக மதுரை கலைநகர் 1ஆவது தெரு மீனாட்சி அவென்யூ குடியிருப்பில் உள்ள தனது மகள் மருத்துவர் வாணி வீட்டில் தனது மனைவி மரகதத்துடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த நிலையில் திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானர்.
பின்னர் விஞ்ஞானி நெல்லை சு.முத்துவின் உடலானது மதுரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மதுரை கலைநகர் 1 ஆவது தெரு மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது மகள் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ,தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்
நெல்லை சு. முத்து தனது பேரன் பேத்தியான முத்துபிரணவ் , சஷ்டிகா மீது அதீத பாசம் வைத்திருந்த நிலையில் நெல்லை சு.முத்துவின் உடலை பார்த்து அவரது பேரன் முத்து பிரணவ் கதறி அழுத நிலையில் அவரது குடும்பத்தினர் ஆறுதல்படுத்தினர்.
விஞ்ஞானி சு.முத்து எப்போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் அப்துல் கலாமின் கொள்கையை பின்பற்றி நடக்க வேண்டும் என தனது பேரன் பேத்திகளுக்கு கூறி வந்தார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்
இன்று மாலை விஞ்ஞானி நெல்லை சு.முத்துவின் உடல் இறுதி சடங்கு முடிந்து மதுரை கலைநகர் பட்டிமேடு மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.