சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
செஞ்சி அருகே பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் மூடப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம்-மருத்துவ சேவை கிடைக்க துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேல்சேவூர் ஊராட்சி.வல்லம் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியான இந்த மேல்சேவூர் ஊராட்சியில் கட்டாஞ்சிமேடு, ஈச்சூர், செங்கமேடு, அம்மன்குளத்துமேடு, கல்லேரி உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியுள்ள நிலையில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மேல்சேவூர் ஊராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக துணை சுகாதார நிலையம் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் மேல்சேவூர் ஊராட்சி பொதுமக்கள் மீண்டும் துணை சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே 15-வது மத்திய மாநில நிதி குழு மானியத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த துணை சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்ட இந்த துணை சுகாதார நிலையம் பொது மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்காத வகையில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் மேல்சேவூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், சளி- காய்ச்சல் மற்றும் விஷக்கடி பாதிப்புக்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 கிலோமீட்டர் முதல் 15 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள மேல்சித்தாமூர், கீழ்மாம்பட்டு மற்றும் செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகளும் இந்த துணை சுகாதார நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.