புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்
புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்துக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகும். பிரான்சில் உள்ள லூர்து தேவாலயத்திற்குப் பிறகு ஆசியாவில் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். ஆசிய கண்டத்திலேயே தமிழர்
பண்பாட்டின்படி ஆலயத்தின் எதிரே குளம் அமைந்திருப்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.
வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு பின்னர் 6-வது நாளில் துவங்குவது வழக்கம்.
அதன்படி, வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149வது ஆண்டு திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலை அருள்நிறை ஆலயத்தில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு,அதனை தொடர்ந்து லூர்து அன்னையின் உருவம் தாங்கிய திருக்கொடி மாதா திருக்குளத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆயர் சகாயராஜ், திருத்தல முற்றத்தில் உள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றினார்.
தொடர்ந்து இன்று இரவு திருத்தலத்தின் சார்பில் லூர்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து தேர் பவனி நடக்க உள்ளது. திருவிழா நவநாட்களில் 9 நாளும் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, மறையுரை மற்றும் தேர்பவனி நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை ஆல்பர்ட், ஆலயத்தின் தலைவர் ஜான் ஜேவியர் ராஜா ஆகியோர் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
