மதுபோதையில் பூனையை கொடூரமாக தாக்கி கொல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி – தெப்பம்பட்டி சாலையில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான பாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெற்கு மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன், மோகன், நவீன் ஆகிய மூன்று பேரும் மது குடித்துள்ளனர்.
அப்போது மதுபான பாரில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு பூனை அவர்கள் குடிக்கும் இடத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளது.அப்போது மது போதையில் இருந்த கண்ணன் என்ற வாலிபர் அந்த பூனையை பிடித்து சுவரின் மீது வீசினார்.சுவற்றில் மோதிய பூனை துடி துடித்தது. அதோடு நிற்காத கண்ணன் துடித்துக் கொண்டிருந்த பூனையின் வாழை பிடித்து துணி துவைப்பது போல மேஜை மீது மூன்று முறை அடித்ததில் அந்த பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்ட பாரில் வேலை செய்து கொண்டிருந்த சந்திரசேகர் என்பவர் கண்ணனையும் அவரது நண்பர்களையும் கண்டித்தனர்.அப்போது கண்ணன் உள்ளிட்ட மூன்று பேரும் மதுபான ஊழியரான சந்திரசேகரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இதனைக் கண்ட மற்றொரு பார் ஊழியர் ஆன செல்லபாண்டி என்பவர் சண்டை போடுபவர்களை விலக்க முயன்ற போது அந்த மூன்று பேரும் சேர்ந்து செல்ல பாண்டியையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்த சந்திரசேகர் மற்றும் செல்லபாண்டி ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்மதுபான பாரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சியை கொண்டு சந்திரசேகர் ராஜதானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மது குடிக்க வந்த 3 பேரில் நவீன் என்பவரை கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள கண்ணன், மோகன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுபான பாரில் வாயில்லாத ஜீவன் பூனையை கொடூரமாக அடித்துக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


