கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா:
எதிர்வரும் 27 மற்றும் 28 ஆந் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27ஆந் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பஸ்கள்; மற்றும் தனியார் பஸ்கள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.
கச்சதீவுக்கான படகுச்சேவை, குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து எதிர்வரும் 27ஆந் திகதி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒருவருக்கான படகுப் பயணக் கட்டணம் 1200 ரூபாயாகும். கச்சதீவுக்கு குழுவாக அல்லது தனியாக படகில் வருகை தரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


