ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளில் வராஹி ராஜ வீதிகளில் வலம்
ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான 5-ம் தேதி இரவு தஞ்சை பெரியக்கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வராஹி எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனையொட்டி பெரியக் கோவில் நந்தி மண்டபம் மேடையில் நாட்டிய கலைஞர்கள் பரதம் ஆடி அஞ்சலி செலுத்தினார்கள். உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தென் புறம் தனி சன்னதியில் வராஹி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் வராஹி அம்மன் சன்னதியில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கடந்த 25ஆம் தேதி ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக துவங்கியது.
11 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவு விழா 5-ம் தேதி இரவு நடைபெற்றது. இதனையொட்டி வராஹி அம்மனுக்கு மல்லிகை, முல்லை, செம்பருத்தி உள்ளிட்ட பலவகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா ஜீவ ஆராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வராஹி அம்மன் எழுந்தருளி கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளை ஒட்டி தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபம் மேடையில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பரதம் ஆடி அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமானவர்கள் பரதநாட்டியத்தை கண்டு ரசித்து கைகட்டி மகிழ்ந்தனர்.