141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி
தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வளைவில் பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக இப்பகுதியில் வெட்ட கணக்கிடப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியினை நெடுஞ்சாலை துறை சார்பில் கோவை கிரீன் கேர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக அமைந்துள்ளது. சாலையில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் செங்கிப்பட்டி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை. புகழ்பெற்ற திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு சென்று வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பூண்டிமாதா வளைவில் திரும்பும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கட்டப்படும் இந்த பாலத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. பாலம் கட்டும் இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரத்தினை வெட்டி சாய்பதை விட வேரோடு புடுங்கி மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
இதற்காக மரங்களை வேரோடு எடுத்து மறுநடவு செய்து வரும் கோவை க்ரீன் அமைப்பை தொடர்பு கொண்டனர்.இந்த நிலையில் அவர்கள் பாலம் வரும் இடத்தில் உள்ள 141 மரங்களை வேறு ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் மறு நடவு செய்யும் பணியினை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கிரீன் கேர் அமைப்பைச் சேர்ந்த சையத் கூறுகையில்,
எங்கள் அமைப்பு சார்பில் இதுவரை கோவை திருச்சி, திருநெல்வேலி, சென்னை என பல்வேறு இடங்களில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை பிடுங்கி நடவு செய்துள்ளோம். தற்போது தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான வேம்பு, புங்கன், உதியன் உள்ளிட்ட மரங்கள் 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளோம்.

முதலில் மரங்கள் பிடுங்கி நடவு செய்வதற்கு முன்பு அந்த மரம் உயிரோட்டமாக உள்ளதா? என பார்ப்பதோடு அதன் தாய்மண் இருக்கும் பகுதிகளிலேயே அந்த மரங்களை பிடுங்கி நடவு செய்து வருகிறோம். நாம் ஒவ்வொரு மரம் நடும்போதும் அடுத்த தலைமுறைக்குஅது பயனுள்ளதாக இருக்கும். மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதன் மூலம் விரைவில் துளிர்விட்டு மரமாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்படும் போது ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்பட வேண்டும் என உத்தரவு இருந்தாலும் இது போன்ற 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான மரங்களை பிடுங்கி நடும்போது செய்யும்போது விரைவில் அந்த பகுதியில் மரங்கள் வளர்ந்து விடும். இவ்வாறு செய்வதன் மூலம் மரங்கள் வெட்டாமல் காப்பாற்றப்படும் என்றார்.


