முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை ஒட்டி வரும் தமிழக அரசின் விளம்பரத்திற்கு பொதுமக்கள் கண்டனம்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை சீரமைப்பதாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை ஒட்டி வரும் தமிழக அரசின் விளம்பரத்திற்கு பொதுமக்கள் கண்டனம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் துவங்கி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் வரை, ஆயிரக்கணக்கான தொகுப்பு வீடுகள் உள்ளன. இவற்றில் 1962 முதல் பழமையான வீடுகள் ஓட்டு வீடுகளாக கட்டப்பட்டன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் கான்கிரீட் கூரை போடப்பட்ட வீடுகளாகும். இவற்றில் பழமையான வீடுகள் சிதிலம் அடைந்த நிலையில் ஓட்டு வீடுகளை பராமரிக்க ரூபாய் 70 ஆயிரமும், கான்கிரீட் வீடுகளை சீரமைக்க ரூபாய் ஒன்றரை லட்சமும் ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வீடுகள் பெரும்பாலும் மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகும். இந்நிலையில் வீடுகளை சீரமைக்க சொற்ப நிதி ஒதுக்கிவிட்டு, அவற்றில் நான்கு சதுர அடி அளவில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகைப்படத்துடன் கூடிய டைல்ஸ் சீரமைக்கப்பட்ட வீடுகளில் ஒட்டும்படி அதிகாரிகள் பயனாளிகளை வற்புறுத்துகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமல் செம்பியன் கோமல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் இதுபோல் வற்புறுத்தி டைல்ஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வீடுகள் பராமரிக்கும் நிதி முழுமையாக தராமல், 70 ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5,000 கமிஷனும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 10,000 கமிஷனும் பெற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சிமெண்ட் மூட்டை தருவதாக கூறிவிட்டு சிமெண்ட் மூட்டை தரவில்லை என்று பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். பழமையான வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டிய தமிழக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அதனை விடுத்து மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு, சீரமைப்பதாக தெரிவித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை நிறுத்த வேண்டும் என்றும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.


