in

 நிலத்தை கையகப்படுத்தி இதுவரை இழப்பீடு வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு போராட்டம்

 நிலத்தை கையகப்படுத்தி இதுவரை இழப்பீடு வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு போராட்டம்

 

மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்தின் கதவை மூடி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ; நிலத்தை கையகப்படுத்தி இதுவரை இழப்பீடு வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.

நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒன்றிய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் விரிவாக்க பணியை பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

570 விவசாயிகளிடம் 620 ஏக்கர் நிலங்கள் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளர்கள், குத்தகை சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது.

ஆனால் இதுநாள் வரை இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தற்போது விரிவாக்க பணிகளை சிபிசிஎல் நிறுவனம் தொடங்கி உள்ள நிலையில் அதை தடுத்து நிறுத்தியுள்ள கிராம மக்கள்
சிபிசிஎல் நிறுவன பிரதான கதவுகளை மூடி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறுவாழ்வு மீள்குடியமர்வு இழப்பீட்டு தொகையான 5 லட்ச ரூபாயை உடனே வழங்ககோரி பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

கிராம மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில் தற்போது விரிவாக்க பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவன வாயிற் கதவை மூடி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாகை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக முயற்சி செய்து வருகின்றனர். சிபிசிஎல் நிறுவனம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அங்கேயே சமையல் பணியை மேற்கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

திருச்செந்தூர் கோவில் கொடியேற்றம்

கொல்லப்போகிறார்கள் கதறி அழுத சதா