பட்டப் பகலில் பட்டாகத்தியால் வெட்டப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
நீடூரில் பட்டப் பகலில் பட்டாகத்தியால் வெட்டப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவத்தின் சிசிடிவி வெளியான நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). இவர் ஏ.எம்.ஹெச் திருமண மண்டபத்திற்கு எதிர்ப்புறம் மரத்தடி நிழலில் இருவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர்.
அதில் அமர்ந்து வந்தவர் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடிச் சென்று முகமது ஹாலிக்கை சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். முகம், உடல், கை உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 108 (ஆம்புலன்ஸ்) மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முகமது ஹாலிக்குக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது ஹாலிக் இன்று உயிர் இழந்தார்.
சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
சந்தேகப்படும் இரண்டு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் மறைவான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.