மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்
மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகல துவக்கம் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிமரம் அமைந்துள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து தங்கக் கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்கிட கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், என்பன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 09-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை தேவியர்களுடன் சுந்தரராஜப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். அதனை தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜைகளையடுத்து காலை 8.40 மணிக்கு மேல் 8.55 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

திருத்தேரோட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் அழகர் கோயிலில் கூடுவர் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


