பழனியில் இலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
பழனியில் பழமை வாய்ந்த அருள்மிகு இலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு இலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மேற்கு ரதவிதியில் அமைந்துள்ள இக்கோவில் வாசலில் 12யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டு இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 29ம்தேதி மாலை முதல்கால வேள்வியுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
அதிகாலையில் துவங்கிய பூஜையில் யாக குண்டங்களில் வைக்கப்பட்ட புனித தீர்த்தம் அடங்கிய கலசங்களுக்கு நான்மறைகள் ஓதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கலச வழிபாடு, திருமேனிகளுக்கு சக்தியேற்றல், திருக்கண் திறத்தல் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலவர் சன்னதி கருவறை கோபுரம், அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் சுற்று தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீரால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, பழனி கோயில் இணைஆணையர் மாரிமுத்து, முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


