கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி திருவிழா
வத்தலக்குண்டு அருகே கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா 4 ஆயிரம் ஆடுகளை பலியிட்டு கறி விருந்து ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி திருவிழா.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தொன்மையான கோட்டை கருப்பணசாமி கோவில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை முடிந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இங்கு திருவிழா நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து கோட்டை கருப்பணசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்
பக்தர்களால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆடுகளை இந்து சமய அறநிலைத்துறையுடன் இணைந்து இந்த கிராமத்து பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்த ஆண்டு சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆடுகள் பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
ஓர் நாள் இரவு நடக்கும் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில் பெண்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை.
விழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் கோட்டை கருப்பணசாமி காவல் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வினை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட ஆடுகள் அனைத்தும் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.
பின்னர் நள்ளிரவில் கோட்டை கருப்பணசாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்குப் பின்பு சமைக்கப்பட்ட கறி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த கறி விருந்து திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை யொட்டி வத்தலகுண்டில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


