மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏந்தி வழிபாடு.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கான, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்களும் வருகை தருவார்கள்.
அந்த வகையில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ குமார கணநாத அம்பாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் பூசாரிகள் உற்சவர் அங்காளம்மனை வடக்கு வாசல் வழியே தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
ஊஞ்சல் உற்சவத்தின் போது கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் எந்தி ஓம் சக்தி அங்காளம்மா தாயே அருள் புரிவாயே என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்கு விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.


