செஞ்சி சட்டமன்றத் தொகுதியில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் சார்பில் என் ஓட்டு என் உரிமை என்ற கருத்தை முன்னிறுத்தி பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.
செஞ்சி வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி காந்தி பஜார், பேருந்து நிலையம் மற்றும் திண்டிவனம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


