நாமக்கல் ஆஞ்சிநேயருக்கு இலட்சத்து 8 வடை மாலை தயாரிக்கும் பணி துவக்கம்
அனுமன் ஜெயந்தி விழா – நாமக்கல் ஆஞ்சிநேயருக்கு இலட்சத்து 8 வடை மாலை தயாரிக்கும் பணி – பூஜையுடன் துவக்கம்

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
வடை மாலை அலங்காரத்தையடுத்து, ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்குக் காலை 11 பஞ்சாமிருதம் தேன் பழவகைகள், பால், தயிர், மஞ்சள், சந்தனம் எனபல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
பின்னர், பிற்பகல் 1 மணிக்கு தங்கக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஆஞ்சநேயருக்கு மாலையாகச் சாத்தப்படவிருக்கும் 1 லட்சத்து 8 வடைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில் (டிசம்பர் 14) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் சுவாமிக்குச் சாற்றப்படும் மாலை தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் ஆர்.கே.கேட்ரிங் சர்வீஸ்
குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, கேட்ரிங் சர்வீஸின் குழுத்தலைவர் ஆர்.கே. ரமேஷ் கூறுகையில், “ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 33 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 10 வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
2 ஆயிரத்து 250 கிலோ உளுந்து மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 82 கிலோ உப்பு ஆகியவற்றைக் கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வடைகள் அனைத்தையும் டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்படும். ஒப்படைக்கப்பட்ட வடைமாலை 19 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் என்றார்.


