தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா சிறப்பு வழிபாடு
தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழாவை முன்னிட்டு, குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் சுமந்து வீதி உலா வந்தனர், வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. மடத்தின் 27வது பீடாதிபதியாக ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.
இவரது அறுபதாம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு, பத்து நாள் விழா நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு எட்டு கால யாகசாலைகள் நடைபெற்றது.
எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, சுவாமிக்கு ருத்ராபிஷேகமும், ஆதின கர்த்தருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஞான கொலு காட்சி நடைபெற்றது.
தொடர்ந்து தங்க பாதக்குரடுகள் தாங்கியபடி, ஆதின மடாதிபதி பக்தர்கள் புடை சூழ நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

யானை குதிரை, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதீன பாதம் தாங்கி பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் மடாதிபதியை வைத்து வீதி உலாவாக வந்தனர்.
மடத்தின் நான்கு ரத வீதிகளில், வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


