செஞ்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வுப் பேரணி!
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி, காந்தி பஜார், பேருந்து நிலையம், திருவண்ணாமலை சாலை, தேசூர் பாட்டை சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது,பட்டாசு வெடிக்கும்போது நைலான் மற்றும் சில்க் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், பட்டாசுக் கடைகள், எரிவாயு கிடங்குகள், உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகள், வைக்கோல் போர்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், மின்மாற்றிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து, தீ விபத்துகள் மற்றும் விபத்துகள் இல்லாத மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


