மயிலாடுதுறையில்ரூ.2 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பி ஓட்டம் எஸ்.பி நேரில் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.


இவரிடம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடையில் சுஹாஷ் மற்றும் ஓம்கார் ஆகிய இருவர் மட்டும் பணியில் இருந்த நிலையில்,ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி அதனை பார் ஆக மாற்றிய சுகாஷ்,அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார்.
அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார்,திடீரென மனம் மாறி தங்க பாரினை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.இதனைக் கண்ட சுகாஷ் கூச்சிலிட்டபடி சிறுவனை விரட்டிய போதும் அவன் வேகமாக ஓடி தலைமறைவாகி விட்டான்.
இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் தனிப்படை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒன்றரை கிலோ நகையுடன் சிறுவன் தலைமறைவாகிய சம்பவம் அப்பகுதி வணிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


