விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மற்றும் மாமரங்களை உடைத்து சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. சேத்தூர் மற்றும் முகவூர் பகுதிகளை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ், நாராயணன், தேவதாஸ், மாடசாமி, கருப்பையா உள்ளிட்ட சிறு குறு விவசாயிகள் தென்னை, வாழை, மா விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலத்திற்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை, மா மற்றும் ஊடுபயிராக வளர்க்கப்பட்ட வாழைக்கன்றுகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வனத்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் குற்றம் சாட்டும் விவசாயிகள், வன விலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.