ஒரு லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்து சாதனை
தஞ்சை மாவட்டத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தற்போது வரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், முழுவதும் முடிய 25 கிடங்குகளில் 90 ஆயிரத்து 683 மெ.டன்னும், மேற்கூறை மூடிய 9 கிடங்குகளில் 86 ஆயிரத்து 399 மெ.டன் நெல் என ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 082 மெ.டன் நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது வரை 2 லட்சத்து 57 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

சென்ற ஆண்டு இதே தேதியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 51 ஆயிரத்து 723 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு 643 கோடி ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது.


