in

பொதுமக்கள் அவதி-புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொதுமக்கள் அவதி-புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

 

செஞ்சி அருகே வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதி-புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செவலபுரை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவாடி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த செவலபுரை-சிறுவாடி செல்லும் வழியின் இடையே வராக நதி செல்வதால் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுவாடி கிராமத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளிய வர முடியாமல் சிறுவாடி கிராமத்திலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.மேலும் அவ்வப்போது இந்த வராக நதியை கடக்கும் போது கால்நடைகள் மட்டுமல்லாமல் மனித உயிர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செஞ்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அதனை அடுத்து புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தது.அந்தப் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்படாமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால் சிறுவாடி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக இந்த பாலம் அமைக்கும் போது ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பாதை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பால், ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் இல்லாமல் விவசாய இடுபொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் என அனைவரும் கம்பிகளில் நடந்து சென்று அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி எதிர்வரும் பருவ மழைக்கு முன்பே இந்த உயர்மட்ட பாலத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவாணி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 125 கிலோ குட்கா பறிமுதல் 

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை