குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
20 நாட்களாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…..
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு…..
திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் கொளத்துமேட்டு தெருவில் 20 நாட்களாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் கொளத்துமேட்டு தெருவில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடிநீர் பைப் லைன் சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
முறையாக குடிநீர் பைப் லைனை அமைக்காததால் கடந்த 20 நாட்களாக அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.
ஆனால் குடிநீர் பைப் லைனை அமைக்காததால் குடிநீர் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
உடனடியாக பொதுமக்களை சாலையின் ஓரம் அழைத்து வந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

