பள்ளி முன்பு மாணவர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள்
நாகை அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை; பள்ளி முன்பு மாணவர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்.

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன்கருதி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால் நான்கு ஆண்டுகளாக தொடக்கப்பள்ளியிலேயே உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வருவதால் கூடுதல் கட்டிடம், விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவ மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே இதுவரை இடம் தேர்வு செய்து உயர்நிலைப் பள்ளி கட்டிடம் கட்ட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நான்கு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். பள்ளி மாணவ மாணவிகளுடன் 500 கும் மேற்பட்ட பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் சாமந்தான் பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இதுவரை கட்டப்படாத காரணத்தால் தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே கடும் சிரமத்தோடு தங்கள் பிள்ளைகள் படிப்பதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக எங்கள் பகுதியிலேயே புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெற்றோர்களிடம் நாகை வட்டாட்சியர் நீலாயதாட்சி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


