கீழ்வேளூர் அருகே திருமண சீர்வரிசை ஏற்றி சென்ற டாட்டா ஏசி வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான பயணம்:
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இளைஞர்களை எச்சரித்து அனுப்பிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெண்மணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் அபாயகரமான சம்பவம் ஒன்று தடுக்கப்பட்டது.
தேர்தல் பறக்கும் படை அலுவலர் தேவேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கீழ்வேளூரில் இருந்து சாட்டியக்குடி நோக்கி சென்ற டாட்டா ஏசி வாகனம் ஒன்றை நிறுத்தினர்.
வாகனத்தில் கல்யாண சீர்வரிசை பொருட்களுடன் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் ஏறி பயணம் செய்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
உடனடியாக போலீசாருடன் இணைந்து செயல்பட்ட அதிகாரிகள், இளைஞர்களை வாகனத்திலிருந்து இறக்கி கடும் எச்சரிக்கை வழங்கினர்.
கிராமப்புறங்களில் மேலே செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இவ்வாறான சாகச பயணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.
பின்னர் எச்சரிக்கையுடன் இளைஞர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

