முத்தாலம்மன் கோவில் திருவிழா வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடைபெற்ற முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் 27 ஆண்டுகள் கழித்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு வழுக்கு மர உச்சியில் உள்ள பரிசு பொருளை பெற்றனர்.

. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தேத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி ஆனது இன்று நடைபெற்றது.
இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியானது 27 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. இதற்காக 65 அடி உயரம் உள்ள மரத்தினை மலைப்பகுதியில் இருந்து வெட்டி வந்து அவற்றின் பட்டைகளை உரித்த பின்பு கற்றாழை, கடுகு, எண்ணெய் உள்ளிட்ட வழுக்கும் தன்மை கொண்டவைகளை பூசி கோவில் முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் வழுக்கு மரத்தில் ஏற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு மரத்தின் உச்சியில் உள்ள பரிசு பொருளை பெற முயற்சிகளை மேற்கொண்டனர் அப்போது மரம் வழுக்கும் தன்மை கொண்டதால் இளைஞர்கள் ஏற முடியாமல் திணறியபடி மரம் ஏற தொடர்ந்து முயற்சித்தனர்.
இதில் இன்று நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மர உச்சியில் உள்ள பரிசு பொருளை கைப்பற்றினார்.

அப்போது கீழே கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரங்களுடன் உற்சாகப்படுத்தினர். இந்த விழாவினை காண ஆயிரக்கணக்கான கோபால்பட்டி, சாணார்பட்டி, செங்குறிச்சி ,செந்துறை, கம்புளியம்பட்டி, ராஜகாபட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


