அரசு மதுபான கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்-பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாலப்பாடி பகுதியில் அரசு மதுபான கடை (கடை எண்:11791)கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அரசு மதுபான கடை வழியாக தான் புதுப்பாளையம், கருவாச்சிதாங்கல், புலிப்பட்டு,பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு மதுபான கடைக்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் மது போதையில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விடுவதாகவும்,

மேலும் அவ்வழியாக செல்பவர்கள் இடம் பிரச்சனை செய்வதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும்,குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் அந்த வழியாக கடந்து செல்ல அச்சம் அடைவதாகவும் அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த அரசு மதுபான கடையை மூடக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை இந்த அரசு மதுபான கடையை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அரசு மதுபான கடையை மூடக்கோரியும் கடையை திறக்க விடாமல் தீடீரென அரசு மதுபான கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லான்பிள்ளைப்பெற்றால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தால் மதுபான கடைக்கு மது பாட்டில்களை வாங்க வந்த மது பிரியர்கள் திரும்பி சென்றனர்.மேலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


